மகளிர் மேம்பாட்டு அமைப்பகம் சார்பாக “சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பழக்கவழக்க மேம்பாடு” குறித்து ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம்


புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் (தன்னாட்சி), மகளிர் மேம்பாட்டு அமைப்பகம் சார்பாக “சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பழக்கவழக்க மேம்பாடு” குறித்து ஒரு நாள் விழிப்புணர்வு கருத்தரங்கம், புதுக்கோட்டை நச்சாந்துப்பட்டி இராமநாதன் செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் 23.01.2020 அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் திரு.D.தங்கமணி தலைமையில், ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு அமைப்பகம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் S.ரத்னாதேவி வரவேற்க மாணவிகளுக்கு வளர்இளம் பெண்களுக்கான தற்கால சூழலில் ஏற்பட்டு வரும் இன்னல்களுக்குத் தீர்வு கூறும் வகையில் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து கற்பக விநாயகா செவிலியர் கல்லூரியின் உதவிப்பேராசிரியர் திருமதி.M. ரஞ்சனி, ‘சுயசுகாதாரத்தின் அவசியம்’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். அவர் தம் கருத்துரையில் இன்று வளர் இளம் பெண்கள் வீட்டிலும், பள்ளியிலும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அதற்கு சுயசுகாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் எங்ஙனம் தீர்வு காணலாம் என்பதைக் குறித்த தகவல்களை விரிவாகக் கூறினார்.

நுண்ணுயிரியல் துறையின் உதவிப்பேராசிரியர் முனைவர் M.பூர்ணிமா “ஊட்டச்சத்து சரிவிகித உணவுமுறை” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். அவர்தம் உரையில் உடலுக்கு உணவின் தேவை முதலில் ஊட்டச்சத்துதான் அதனை அடுத்து தான் சுவை. ஆனால், நாம் தொலைக்காட்சிகளில் பார்க்கி;ன்ற காட்சிவழி பசி தூண்டப்படுவதால் சுவையை மட்டுமே முதன்மைபடுத்தி மேற்கொள்கிறோம். இதற்கு, மிகப்பெரிய உதாரணம் ‘துரித உணவுகளே’. ஒரு உயிரினம் தோன்றும் இடத்தில் அந்த உயிரினத்திற்குத் தேவையான பொருத்தமான உணவினை அம்மண்சூழல் தருகிறது. அதனை விட்டு பிறசூழல்களில் உற்பத்தி ஆனதையும் செயற்கையாக உருவானதையும் உட்கொள்ளும்பொழுதே உடல் பருமன், பெண் உடல் சூழற்சி முறைகளில் மாற்றம் போன்ற பிரச்சனைகளைச் சந்திக்கிறோம்.

எனவே இதனை தவிர்க்க ஒவ்வொரு உணவு வேளையிலும் சரிவிகித உணவினை அறுசத்துணவு (கொழுப்பு, கார்போஹட்ரேட், தாதுக்கள், புரோட்டீன், வைட்டமின், நீர்) எடுக்க வேண்டும். நமது உணவுமுறை சரியாக இருந்தாலே உடல் இயக்க முறையும் சீராக இருக்கும். இதனாலே ‘ You are what you eat’ என்பர். ஆரோக்கியமான உடலை ஏற்படுத்தும்பொழுதே வலிமையான மனித சமுதாயத்ததை உருவாக்க இயலும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியின் நிறைவில் திருமதி. P.பிரியதர்ஷினி, உதவிப்பேராசிரியர், உயிர் தொழில்நுட்பவியல் துறை நன்றி கூறினார்.