தெற்காசிய கையுந்துப் பந்து போட்டியில் தங்கம் வென்ற ஜெரோம் வினித்திற்குப் பாராட்டு விழா


ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) 22.01.2020 அன்று தங்கப் பதக்கம் வென்ற சர்வதேச கையுந்துப் பந்து வீரர் ஜெரோம் வினித்திற்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்குக் கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் முன்னாள் மத்திய, மாநில அமைச்சர், திருமயம் சட்டமன்ற உறுப்பினருமான திருமிகு ளு.ரகுபதி அவர்கள் தலைமையேற்று பேசினார். அவர் தம் உரையில் மொழிப்போர் தியாகியின் குடும்பத்தைச் சேர்ந்த ஜெரோம் நம் மண்ணின் மைந்தர் என்பதில் நாம் அனைவரும் பெருமைக் கொள்கிறோம். கடின உழைப்பாளும் இடைவிடாத முயற்சியாளும் ஆசிய அளவில் வெற்றிப்பெற்று நம் மண்ணிற்கும் நம் தேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ள ஜெரோமை இத்தருணத்தில் நான் மனதார பாராட்டுகின்றேன்.

அவரது சாதனை இத்தோடு நின்றுவிடாமல் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வெல்வதோடு ஆட்டநாயகனாகவும் திகழ வேண்டும் என பாராட்டி மகிழ்கிறேன். வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டுத்துறையில் சாதிக்கக் கூடிய மாணாக்கர்கள் 30 பேருக்கும் திருமயம் பகுதியைச் சேர்ந்த 100 மாணாக்கர்களுக்கும் எங்கள் கல்வி நிறுவனம் வழி கட்டணமில்லா கல்வி வழங்கப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மாநில கையுந்துப் பந்து கழக பொதுச்செயலாளர் திரு. மார்ட்டின் சுதாகர், கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் முனைவர் கவிதா சுப்பிரமணியன், பாரதிதாசன் பல்கலைக்கழக உடற்கல்வித்துறைத் தலைவர் முனைவர் A.பழனிசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திருமதி A.மாலதி, மாவட்ட கையுந்துப் பந்து தலைவர் திரு.C.ஜெயசிங் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். ஜெரோம் வினித், தன் பாராட்டு ஏற்புரையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் தரும் கல்லூரிகளில் ஜெ.ஜெ. கல்லூரி சிறந்து விளங்குகிறது. இங்கு பயில்கின்ற மாணாக்கர்கள் பலர் விளையாட்டுத் துறையில் பல சாதனைகள் புரிந்து வருகின்றனர். நான் இக்கல்லூரியில் பயில விரும்பியபோது எதிர்ப்பாராத விதமாக இக்கல்லூரியில் பயிலும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமல் போனது. மாணாக்கர்களாகிய உங்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்திக் கொண்டால் சர்வதேச அளவில் நீங்களும் நாளை சாதிக்கலாம். மேலும், புதுக்கோட்டையில் விளையாட்டுத்துறைக்குச் சிறந்த பயிற்சியாளரை அரசு அமைத்து தந்தால் புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள பல மாணாக்கர்கள் விளையாட்டுத் துறையில் சாதனையாளர்களாக உயர்வீர்கள் என்று கூறினார்.

முன்னதாக, கல்லூரி முதல்வர் முனைவர் ஜ.பரசுராமன் வரவேற்க, உடற்கல்வித்துறைத் தலைவர் முனைவர் K.ஜெகதீஸ் பாபு நன்றியுரைக் கூறினார்.